64 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கம்புணரி அருகேயுள்ள மாம்பட்டியை தாய் கிராமமாக கொண்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் 1954ம் ஆண்டு முதல் இன்று வரை 64 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை.

தீபாவளியன்று இக்கிராமங்களில் புத்தாடை, பட்டாசு, பலகாரம் என, எதையும் காண முடியாது. இப்பகுதியைச் சேர்ந்த முன்னோர்கள் கடன் வாங்கி விதைத்து, அறுவடையின் போது வட்டி கட்ட முடியாத அளவுக்கு, விளைச்சல் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், தீபாவளியும் வருவதால், அதையும் கடன் வாங்கி கொண்டாட அவர்களுக்கு விருப்பம் இல்லை.

இதனால் இக்கிராமப் பெரியவர்கள் கூடி விவசாயப் பணி காலத்தில் வரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை எனவும் அறுவடைக்குப் பின் வரும் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவது எனவும் 64 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை இக்கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை. சிறுவர்களுக்கு கூட இப்பண்டிகை தொடர்பான எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here