ஹூஸ்டனில் திருக்குறள் திருவிழா..!!

டெக்சஸ் மாகாணம் ஹூஸ்டன் மாநகரில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி, ”திருக்குறள் திருவிழா” கொண்டாடி, பள்ளி மாணாக்கர்களுக்கு குறள் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது. இதில் பங்குபெறும் மாணக்கர்கள் குறள் ஒப்புவிப்பதுடன் அதன் விளக்கத்தையும் கூறுகின்றனர்.

சரியான முறையில் விளக்கத்துடன் ஒப்புவிக்கப்படும் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு டாலர் என்றளவிலும், விளக்கமல்லாது ஒப்புவிக்கப்படும் குறள் ஒவ்வொன்றிற்கும் 50 சென்ட்ஸ் என்றளவில் பணமுடிப்புப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் வெவ்வேறு வயதுக்குட்பட்ட பிரிவுகளில் அதிகக் குறட்பாக்கள் ஒப்புவிக்கும் மாணாக்கர்களுக்கு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று பரிசுகள் விருதுகளாக பள்ளி ஆண்டு விழாவன்று வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு ”திருக்குறள் திருவிழா”, ஒவ்வொரு கிளைப்பள்ளியிலும் கேட்டி, உட்லண்ட்ஸ், பியர்லேண்ட், மேற்குஹூஸ்டன் மற்றும் சுகர்லேண்ட் தமிழ்ப்பள்ளி நிலையங்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் 4 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட சுமார் 300 மாணாக்கர்கள் பங்குபெற்று, மொத்தம் 4603 அமெரிக்க டாலர் பணமுடிப்பை பரிசாகப் பெற்றனர்.

கிட்டத்தட்ட மொத்தம் 5327 குறட்பாக்கள் மாணாக்கர்களால் ஒப்புவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில குறள்களை பல மாணாக்கர்கள் தனித்தனியே ஒப்புவித்ததும் அடங்கும். மேலும் 50 மாணாக்கர்கள் 50-க்கும் மேற்பட்ட குறட்பாக்களை ஒப்புவித்தனர். விழாவின் முத்தாய்ப்பாக, 243 மற்றும் 181 குறட்பாக்கள் அதிகமாக ஒப்புவிக்கப்பட்டு சுமார் 200 டாலர்கள் அளவில் சிறப்புப் பரிசுகளை தட்டிச்சென்றனர்.

4 வயதுடைய மாணாக்கர்கள்கூட, பெருமை வாய்ந்த ஈரடிக் குறட்பாக்களை உயரிய விளக்கத்துடன் ஒப்புவித்தது வியப்பளிப்பதாக அமைந்ததுடன் விழாவிற்கு முத்திரை பதிக்கத்தக்கதாகவும் இருந்தது. பள்ளி சாராத தமிழ்ப்பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நடுவர்களாகப் பணியாற்றி இவ்விழா சிறப்புற ஒத்துழைப்பு நல்கினர். இவர்களைப்போன்ற தன்னார்வலர்கள் இல்லாமல் இவ்விழா சிறப்புற நடைபெற்றிருக்க இயலாது.

சில பெற்றோர்கள், அவர்தம் குழந்தைகள் பெற்றிருந்த பரிசுக்கு இணையாக அவர்களும் பரிசுகள் வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினர். இந்த சீர்மிகு “திருக்குறள் திருவிழா” வினை ஒருங்கிணைத்த பெருமை பள்ளியின் துணைத்தலைவர் பாலா சிவப்பிரகாசம் தலைமையிலான தன்னார்வலர் குழுவினையே சாரும்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here