பெருமாள் சிவபெருமானாக மாறிய குற்றாலநாதர் கோவில்

குற்றாலநாதர் கோயில் திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனி சிறப்பாகும்.

இறைவன் – குற்றாலநாதர் என்கிற திரிகூடநாதர்
இறைவி – குழல்வாய் மொழியம்மை

பெருமாள் சிவபெருமானாக மாறிய வரலாறு :

திருக்கயிலையில் சிவபெருமான், பார்வதிதேவி திருமணத்தைக் காண மூவுலகத்தைச் சார்ந்த அனைவரும் கூடியிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் வடக்கு திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. இதைக் கண்ட ஈசன், குறு முனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி பணித்தார்.

ஒப்புக்கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ‘ஐயனே! நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென் திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்’ என்றார். தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம், “நீ தென்திசையில் உள்ள பொதிகை மலைக்குச் செல். அங்குள்ள திரிகூட மலையில், எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்” என்று ஈசன் வாக்களித்தார். அகத்தியர் தென்திசையை வந்ததும் பூமி சமநிலை அடைந்தது.

ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர். திரிகூட மலை பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக சிவதலம் ஏதாவது இருக்கிறதா? என்று தேடினார். ஆனால் அருகில் எந்த சிவதலமும் இல்லை. இந்த நிலையில் திரிகூட மலையில் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது.

பெருமாளை தரிசிக்க எண்ணிய அகத்தியர் கோவிலை நெருங்கினார். சைவ மத அடையாளம் தரித்தவர்களை உள்ளே விடமுடியாது என்று அவரை தடுத்து விட்டனர். பிறகு, இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தேடி வந்தார். திரிகூட மலையில் தனக்கு நடந்தவற்றை கூறி முருகப்பெருமானிடம் தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

அகத்தியர் முன்பாக தோன்றிய முருகப்பெருமான், ‘வைணவ அடியவர் போல் சமயச் சின்னம் தரித்து கோவிலுக்குள் சென்று பஞ்சாட்சரம் ஓதி விஷ்ணுவை, சிவலிங்கம் போல் மாற்றி வழிபடுங்கள்’ என்று கூறி அங்கிருந்து மறைந்தார்.

முருகப்பெருமான் கூறியபடி வைணவ அடியவர் போல் திருக்குற்றாலத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் சென்றார், அகத்தியர். பின்னர் அங்கிருந்த அர்ச்சகரிடம், “பெருமாளுக்கு மானசீக பூஜை செய்ய வேண்டும் சிறிது நேரம் வெளியில் இருங்கள்” என்று கூறி, கருவறைக் கதவை மூடினார்.

கருவறையில் நின்ற கோலத்தில் இருந்த பெருமாளின் தலையில் கை வைத்து அமுக்கி, ‘குறுகுக… குறுகுக…’ எனக் கூறி சிவபெருமானை நினைத்து தியானித்தார். என்ன ஆச்சரியம்…! பெருமாளின் திருமேனி குறுகிப்போய் சிவலிங்கமாய் மாறிப்போனது. சிவனை துதித்து வழிபட்டார் அகத்தியர். வழிபாடு முடிந்ததும் கருவறைக் கதவைத் திறந்து வெளியேறினார்.

அப்போது கருவறையில் பெருமாளைக் காணவில்லை. சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் கோபம் கொண்டனர். அகத்தியரை வசை பாடினர். அதற்குள் அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட்டார். அது அவர்களைத் தாக்கியது.

இதனால் அவர்கள் அகத்தியரிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். அவர்களிடம், ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்று அகத்தியர் கூறினார். அந்த விஷ்ணுவே இன்று, ‘நன்னகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இதையடுத்து அங்கிருந்தே ஈசனின் திருமணக் கோலத்தை கண்டுகளித்தார் அகத்தியர்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை “திரிகூட மலை” என்றும் அழைக்கிறார்கள்.

மனிதனின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர் குற்றாலநாதர். இந்த ஆலயத்தில் தலமரம் குறும்பலா. இந்த பலா மரத்தின் கிளைகள், கனிகள், சுளைகள், வித்துக்கள் என யாவும் சிவலிங்க வடிவமாகவே உள்ளது. அம்பாளும், சிவனும் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று குற்றாலநாதருக்கும், குழல்வாய் மொழியம்மைக்கும் அகத்தியர் சன்னிதி அருகில் திருமணம் நடைபெறும்.

ஈசனும், அம்பாளும் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுக்கிறார்கள். இங்குள்ள பராசக்தியே உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தாள் என்று கூறப் படுகிறது. எனவே இங்குள்ள பீடத்தை தரணிபீடம் என்கிறார்கள்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here