பெண்களை காக்கும் கை கவசம்..!

பாலியல் தொந்தரவு உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் ‘ஸ்மார்ட் பிரேஸ்லெட்டை’ அமெரிக்க மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இன்றைய நவீன உலகில் வளையலுக்குப் பதிலாக உருவெடுத்துள்ள ‘பிரேஸ்லெட்’ இளம் பெண்களின் விருப்பமாக உள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. சில, ஆண்களுக்கும் பிடித்தமானதாக உள்ளது. இந்நிலையில் கைகளுக்கு நளினம் தரும் அதே நேரத்தில், பாதுகாப்பு கருவியாகவும் செயல்படும் ‘ஸ்மார்ட் பிரேஸ்லெட்டை’ அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் விலை ரூ. 2,600.

அலாரம் :

இந்த பிரேஸ்லெட்டில் சென்சார், புளூடூத் போன்ற வசதிகள் உள்ளன. இந்த சென்சார், ஒரு நபரின் சாதாரண பழக்கவழக்கங்களுக்கும், ஆபத்து காலங்களில் இருப்பதற்குமான வேறுபாட்டை அறிந்திருக்கும். இதனை கையில் அணிந்து செல்லும் பெண், பாலியல் தொந்தரவு, கொள்ளை அல்லது எதிரிகளால் தாக்கப்படுதல் உள்ளிட்ட ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளானால், பிரேஸ்லெட் தாமாகவே இயங்க தொடங்கும். சென்சார் மூலம் உணரப்பட்டு, பிரேஸ்லெட்டில் அலாரம் அடிக்கும். இதில் உள்ள ‘சிவப்பு’ நிற எல்.இ.டி., ஒளி பிரகாசிக்கும். இதனால் அருகில் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.

குறுந்தகவல் :

அடுத்ததாக பிரேஸ்லெட்டில் உள்ள ‘புளூடூத்’ மூலம், பாதிக்கப்பட்டுள்ளவரின் ‘ஸ்மார்ட்போனில்’ இருந்து, போலீஸ் மற்றும் அவரால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதிவு செய்துள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அலைபேசிக்கு, ‘குறுந்தகவல்’ சென்று விடும். இதில் பாதிப்புக்கு உள்ளான இடம், நேரம், அவர் கீழே விழுந்து கிடக்கிறாரா அல்லது நின்று கொண்டிருக்கிறாரா என்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக காப்பாற்றும் வாய்ப்பு ஏற்படும்.

இதனை தயாரித்த மாணவர்கள் கூறும்போது, “பெண்களின் பாதுகாப்புக்காக இதனை தயாரித்துள்ளோம். தற்போது சோதனை முறையில் இயக்கப்படுகிறது. பாலியல் தொந்தரவு மட்டுமல்லாமல், முதியோர்கள் நடந்து செல்லும் போது, தவறி விழுந்து விட்டால், அவர்களை காப்பாற்றவும் இது உதவும்” என்றனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here