பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 32வது ஆண்டு விழா

பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை, தனது 32வது ஆண்டு கலை விழாவை, கடந்த செப்டம்பர் 9, 2017 அன்று இந்தூருப்பில்லி உயர்நிலைப்பள்ளி கலையரங்கில் மிகச் சிறப்பாக அரங்கேற்றியது. குத்துவிளக்கேற்றலுடன் துவங்கிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டது.

பிரிஸ்பேன் நகர், பொற்கரை, தூவூம்பா மற்றும் இந்த ஆண்டில் புதிதாக துவங்கப்பட்ட ‘அல்பானி க்ரீக்’ ஆகிய நான்கு வளாக மாணவ–மாணவியரும் ஒருங்கிணைந்து மேடையேற்றிய இந்நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் ஆக முத்தமிழையும் போற்றும் வண்ணம் நடனங்கள், நாடகங்கள், விநோத உடை என பல்வகை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதுடன் இருந்துவிடாமல் துவக்கம் முதல் நன்றியுறை வரை, நிகழ்ச்சிகளை மாணவ-மாணவியர்களே தொகுத்து வழங்கியது இந்நிகழ்ச்சியின் சிறப்பான அம்சம். ‘கொன்றை வேந்தன்’, ‘பன்னிரு மாதங்கள்’, ‘ராஜராஜ சோழன்’, ‘ஓளிபடைத்த கண்ணினாய்’, ‘குடி வாழ கோன் வாழ்வான்’ முதலான நிகழ்ச்சிகள் தமிழ் சரித்திரத்தையும், கலாச்சாரத்தையும் சார்ந்தமைந்திருந்தது.

நாடகங்களில் இடம் பெற்ற மாணவ–மாணவியரின் தங்குதடையற்ற சரளமான வசனங்களும், உச்சரிப்பும், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களின் அயராத உழைப்பையும், புலமையையும் வெளிப்படுத்தியது. நிகழ்ச்சியின் இறுதியில் ‘செம்மொழி’ நடனத்தைத் தொடர்ந்து தமிழ்ப் பாடசாலையின் பாடலை அனைத்து மாணவ-மாணவியரும் ஒருசேர பாடினர். கலாச்சாரத்தை பாதுகாக்க மொழி அவசியம் என்ற உண்மையை அறிந்து, நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வரும் ஆஸ்திரேலிய அரசாங்கம் போற்றுதற்குரியது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here