பாலிதீன் கழிவில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு..!!

தமிழகத்தில் முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில், பாலிதீன் கழிவிலிருந்து டீசலுக்கு மாற்றான ‘பைரோ’ எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பின்போது ‘பாலி எத்திலின்’ என்ற துணைப்பொருள் கிடைக்கிறது. இதன் மூலம் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளன.

இவற்றை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ள நிலையில், இதன் கழிவில் இருந்து ‘பைரோ’ எண்ணெய் தயாரிக்கும் முயற்சியை துவக்கி உள்ளது தேவகோட்டை நகராட்சி. இதை டீசலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். தேவகோட்டை நகராட்சி பகுதி குப்பை காரைக்குடி ரஸ்தா கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு 12 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட இயந்திரம் மூலம் குப்பை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.

பின் பாலிதீன் கழிவு மூலம் ‘பைரோ’ எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் பைரோ இன்ஜினியரிங் கன்சல்டன்சி உரிமையாளர் மகாராஜன் கூறியது: “ஒரு பொருள் எதில் இருந்து வந்ததோ அதன் நிலைக்கு கொண்டு செல்வது ‘பைரலைசர்’ யூனிட்டின் வேலை. 12 அடி உயரம், ஆறு அடி அகலமுள்ள அடுப்பு அமைக்கப்பட்டு, அதனுள் உள்ள உலையில் பாலிதீன் கழிவு கொட்டப்படுகிறது. இரண்டு அடுப்பு உள்ளது. குப்பையில் இருந்து எடுக்கப்படும் தென்னை கழிவு, விறகுகளை பயன்படுத்தி 250 முதல் 300 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் ஏற்றப்படுகிறது.

பாலிதீன் எரிக்கப்படுவதில்லை. விறகின் வெப்பதால் உருகி ஆவியாகிறது. குழாய் வழியாக வெளிவரும் இந்த ஆவி குளிர்விக்கப்பட்டு, ‘பைரோ’ எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. எஞ்சிய ஆவி, குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதிக்காது. அடுப்பு மூலம் வெளியாகும் புகை பெரிய குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 250 கிலோ பாலிதீனை எரித்து 20 முதல் 25 லிட்டர் ‘பைரோ’ எண்ணெய் தயாரிக்க முடியும்.

இதை தொழிற்சாலைகளில் டீசலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம். ஜோலார்பேட்டையில் இது மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டது. ஆணையர் பார்த்தசாரதி முயற்சியால் தற்போது முழு அளவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 500 கிலோ பாலிதீனை எரிக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவை இல்லை.

குப்பையிலிருந்தே எரிபொருள் கிடைக்கிறது. 2 லட்ச ரூபாயில் இந்த தயாரிப்பு முறையை கிராமங்களில் ஏற்படுத்தி, விவசாய கழிவை திரவ உரமாகவும், கரித்தூளாகவும் மாற்றி மீண்டும் பயன்படுத்த முடியும். இதற்கான மாதிரியை உருவாக்கி, சான்றிதழும் பெற்றுள்ளேன்”. இவ்வாறு கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here