நீட் குறித்து நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராச்சஸ்ட்டர் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நீட் பற்றிய உரையாடல்களைத் தனது உறுப்பினர்களோடு சேர்ந்து தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆன்லைனில் கூடிய நமது செயற்குழுவில் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஹென்ரியெட்டா நகரத்தில் கூடி மருத்துவர் அனிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது எனவும், நீட் அவசியமா இல்லையா என்பது குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், 6 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

துவக்கத்தில் மருத்துவர் அனிதாவுக்கும், தீவிரவாத இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட காவ்ரி லங்கேஷ் அவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நீட் தேவையா இல்லையா என்ற கலந்துரையாடல் நடந்தது. தேவை, தேவையில்லை, நடுநிலை என மூன்று விதமான கருத்துகளும் எடுத்து வைக்கப்பட்டன.

விவாதத்தின் இறுதியில், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் பல லட்சங்கள் நன்கொடை பெற்றுக்கொண்டு சீட் கொடுக்கும் கொடுமையை மாற்ற தனியார் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளுக்கு நீட் போன்ற ஒரு தேர்வை மாநில அரசு நடத்தி குறைந்த பட்ச தகுதி பெற்றவர்களை அரசே நிரப்ப வேண்டும்,

மற்ற இடங்களுக்கும், அரசுக் கல்லூரிகளின் 85 சதவீத இடங்களை இப்போது உள்ள முறையில் +2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நிரப்ப வேண்டும். அதே சமயம் +1 பாடங்களை நடத்தாமல் இருக்கும் நிலையை மாற்ற பதினோராம் வகுப்பைப் பொதுத் தேர்வாக மாற்றி அந்த மதிப்பெண்களையும் கட் ஆஃப் மதிப்பெண்களில் சேர்க்க வேண்டும்.

மேலும் தேர்வு முறையை மாற்றி மனப்பாடம் செய்தால் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நிலையை மாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதான கருத்துகள் பேசப்பட்டன. ஒருவேளை நீட் திணிக்கப்படுமானால், அதற்கான பயிற்சி வகுப்புகள் எடுக்க நமது அமைப்பு முடிந்த உதவிகள் செய்ய வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here