ஜப்பானியர்களை கலங்கடித்த ஆகஸ்ட் மாதம்

உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்சியாளர்கள் பலர் வரலாற்றில் தோன்றி இருக்கிறார்கள். ஜப்பானும் ஒரு கட்டத்தில் அப்படியொரு எண்ணத்தில் இருந்தது. அந்த எண்ணத்தை வெறும் கசப்பான கனவாக மாற்றியது இந்த ஆகஸ்ட் மாதம்தான்.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மேல் அமெரிக்க விமானப்படை அணுகுண்டு ஒன்றைப் போட்டது. நடந்தது தாக்குதலா? அல்லது கடுமையான நிலநடுக்கமா? என்று சந்தேகித்துக் கொண்டிருந்த ஜப்பானிய அரசுக்கு அந்த குண்டு வீச்சின் இன்னொரு பரிமாணத்தைப் புரிந்து கொள்ளவே சில மணி நேரங்கள் ஆனது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக மூன்று நாள்கள் கழித்து இன்னொரு அணுகுண்டு நாகசாகி நகரத்தில் வீசப்பட்டது. இரண்டு குண்டு வீச்சுகளையும் சேர்த்து சுமார் 3 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.

இன்னொருபுறம், சோவியத் ஒன்றியத்துடனான அமைதி முயற்சிகள் தோற்று போனது. அதனால் ஜப்பானையும் அது பிடித்து வைத்திருந்த பகுதிகளையும் அவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். ஒருவாரத்துக்கு முன்பு கூட, சரணடைவதை பற்றி ஜப்பானிய ராணுவம் சிறிதும் யோசிக்கவில்லை. ஹிரோஷிமாவில் குண்டு வீசிய பிறகும், பெரும்பாலான ராணுவத் தளபதிகளுக்கு சரணடைவதில் உடன்பாடில்லை. ஆனால் சோவியத் ஒன்றியம் போர் அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான், ஜப்பான் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாரானது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மன்னருக்கும் பெரியோருக்கும் மட்டுமே தலைகுனிந்து பழக்கப்பட்டிருந்த ஜப்பானிய மக்கள் வானொலிப்பெட்டிகளுக்கு முன் மண்டியிட்டிருந்தனர். ரஷ்யாவையும் சீனாவையும் மட்டுமல்லாமல் இந்தியாவையும் மத்திய கிழக்கு நாடுகளையும்கூட தனது பேரரசுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டிருந்த ஜப்பானில் சோகம் தவழ்ந்தது.

மாவீரராகவும் யாராலும் வீழ்த்த முடியாத ராணுவத்தைக் கொண்டிருப்பவராகவும் கருதப்பட்ட மன்னர் ஹிரோஹிட்டோ, தோல்வியை ஒப்புக் கொள்வதை மக்கள் நேரலையாகக் கேட்டனர். ஆசியப் பிராந்தியத்தில் அமைதியையும் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக மட்டுமே ஜப்பான் போரில் இறங்கியதாக மன்னர் அப்போது தெரிவித்தார்.

ஜப்பான் முழுவதும் மக்கள் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட நேச நாடுகளில் மக்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாடினர். மன்னரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜப்பானியப் படைகள் நேச நாட்டுப் படைகளிடம் சரணடையும் நிகழ்வுகள் தொடங்கின. இரு வாரங்கள் கழித்து செப்டம்பர் 2-ம் தேதியன்று டோக்யோ வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலுக்குள் சரணடைவதற்கான ஆவணத்தில் ஜப்பானியப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

அன்று முதல் அமெரிக்காவுக்கு அடிமை என்பதை ஜப்பான் ஏற்றுக் கொண்டது. ஜப்பானியர்கள் யாரையும் நேசநாட்டுப் படைகள் துன்புறுத்தக்கூடாது, மக்களுக்கு உணவு வழங்கப்படுவதைத் தடுக்கக்கூடாது என்பது போன்ற சில சலுகைகளை மட்டும் ஜப்பானியர் கேட்டுப் பெற்றிருந்தனர்.

இதேபோல் செப்டம்பர் 12-ம் தேதி சிங்கப்பூரிலும், பின்னர் தைவான், நியூ கினியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் முகாமிட்டிருந்த படைகள் நேச நாட்டுப் படைகளிடமும் சரணடைந்தனர். சரணடையப் பிடிக்காதவர்களும், செய்தி கிடைக்காதவர்களும் பல ஆண்டுகள் போரிட்டு மரணமடைந்தனர். இந்தத் தோல்வி ஜப்பானின் வரலாற்றையே மாற்றி எழுதியது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here