செமஸ்டரில் 50 சதவீதத்துக்கு குறைவாக மார்க் எடுத்தால் ‘பெயில்’ – தெலுங்கானா அரசு

கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் எடுக்கவில்லை என்றால், அவர்களை பெயிலாக்கி அடுத்தாண்டு வகுப்புக்கு செல்ல முடியாத வகையில் தெலங்கானாவில் புதிய கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா உயர் கல்வி கவுன்சில் தலைவர் பாப்பி ரெட்டி கூறுகையில், “கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முதல் மற்றும் 2வது செமஸ்டரில் 50 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெற்றால் அந்த மாணவர்கள் ‘பெயில்’ ஆக்கப்படுவார்கள். அவர்கள் இரண்டாம் ஆண்டு படிப்பை உடனடியாக தொடர முடியாது. மீண்டும் முதலாம் ஆண்டு வகுப்பில் படித்து இரு செமஸ்டர்களையும் பாஸ் செய்த பிறகே இரண்டாம் ஆண்டு வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இதேமுறை தான் அடுத்தாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் பின்பற்றப்படும். மேலும் ஒவ்வொரு செமஸ்டரில் 75 சதவீத வருகை பதிவு மாணவர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த செமஸ்டருக்கு தேர்வு எழுத முடியாது’’ என்றார்.

பழைய கல்வி முறையில் செமஸ்டரில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், அடுத்தாண்டு வகுப்புக்கு சென்று அரியர்ஸாக பழைய செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம். ஆனால் இந்த ‘பெயில்’ முறையில் அவ்வாறு செய்ய முடியாது. இதனால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை மாணவர்கள் முடிக்க முடியாத சூழல் ஏற்படும்.

வகுப்புகளை கட்டடிப்பது, தேர்வுகளுக்கு சரியாக படிக்காமல் சுற்றுவதால் அரியர்ஸ் அதிகளவில் வைக்கின்றனர். இதனால் தரம் குறைகிறது. இதை கருத்தில் கொண்டு தெலங்கானா உயர் கல்வி கவுன்சில், பெயில் முறையை கல்லூரிகளில் அதிரடியாக அமல்படுத்தியுள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here