சென்னையில் வாக்காளர் பெயர் சேர்க்க , நீக்க, முகவரி மாற்ற என்ன செய்யலாம்?

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வாக்காளர்கள் பெயர் மாற்றம் செய்ய சேர்க்க, நீக்க, விலாசம் மாற்ற என்ன செய்ய வேண்டும், இணையதளம் மூலம் மாற்ற என்ன செய்யலாம் எனபது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் வழிகாட்டுதலை அளித்துள்ளது.

இது குறித்த மாவட்ட தேர்தல் அலுவலக குறிப்பு வருமாறு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் ஜனவரி 2018-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2018 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் ( 01.01.1999 ஆம் தேதிக்கு முன்பிறந்தவர்கள்) படிவம் 6 ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7–னை பூர்த்தி செய்தும், பட்டியலில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்தும் அளிக்க வேண்டும்.

சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-A ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் இன்று முதல் அக்டோபர் 31 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அது சமயம் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களை அளிக்கவும், இந்தச் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி www.elections.tn.gov.in மற்றும் www.nvsp.in  என்ற இணையத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here