சிறுவர்கள் அஞ்சல் கணக்குகளுக்கு இனி ஏ.டி.எம்., கார்டு கிடையாது

அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்குகள் துவக்கும் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. வங்கி சேவையில் களம் இறங்கவுள்ள அஞ்சல் துறை, அனைத்து சேமிப்பு கணக்குகளையும் ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்கள், நாட்டின் எந்த அஞ்சல் நிலையத்திலிருந்தும், எளிதில் பணம் எடுக்க வழிவகை செய்துள்ளது. இதற்காக 1,000த்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்களை நாடு முழுவதும் துவக்கியுள்ளது.

வங்கி சேவை கட்டணம் அதிகமாக உள்ளதால், அஞ்சல் நிலையங்களில், கணக்கு துவக்குவோர் எண்ணிக்கை அதிகரித்தது. குறைந்தபட்சம் 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினாலே ஏ.டி.எம்., கார்டு, காசோலை புத்தகம் மற்றும் அனைத்து வங்கி, ஏ.டி.எம்., கிளைகளிலும், இலவச பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன. அதனால் மக்கள் அதிகளவில் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இதற்கு எவ்வித வயது வரம்பும் இல்லை.

பிறந்த குழந்தைகளுக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் அஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்கலாம். நகரங்களை தவிர்த்து, பல மாவட்டங்களில் சிறார்களுக்கும், அஞ்சல், ஏ.டி.எம்., கார்டு வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 வயதுக்கு உட்பட்டவர்களின் கணக்குகளுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கும் முறையை அஞ்சல் துறை கைவிட்டுள்ளது.

இது குறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: “அஞ்சல் துறையில், ஏ.டி.எம்., கார்டு திட்டம், இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கான கணக்குகளுக்கும், ஏ.டி.எம்., கார்டு பெற்று, பெற்றோர் பயன்படுத்தி வந்தனர். தற்போது சில காரணங்களுக்காக 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு, ஏ.டி.எம்., கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here