“சித்திரைத் திருநாள்” கொண்டாட்டம் – குவைத்

குவைத் தமிழோசை கவிஞர் மன்றம், தமது 144-ம் மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில் “சித்திரைத் திருநாளை” வெகு விமரிசையாகக் கொண்டாடியது. “இன்பத்தமிழ் இந்திரவிழா புகழரங்கம்” என்று பெயரிடப்பட்ட ‘ஃபோக் கேளிக்கை அரங்கம்’, மங்காஃப், குவைத்தில் காலை 10 மணியளவில் மன்ற காப்பாளர் கவிஞர் விட்டுக்கட்டி மஸ்தான் துவக்கவுரையாற்ற, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வுக்கு மன்றத் தலைவர் இராபர்ட் ரெத்தினசாமி அவைத்தலைமையேற்றும், துணைச் செயலாளர் மன்னை இராஜா முன்னிலையும் வகித்தனர்.

குவைத் தேசிய வங்கியின் துணை பொது மேலாளர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராய் பங்கேற்று சிறப்பித்தார். தமிழோசையின் கொள்கைப்பாடலை இராபர்ட் வழங்கிட, மன்றத்தின் கவிஞர்களும் பாடகர்களும் தங்களின் மனங்கவர் பங்களிப்புகளினால் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டனர். சித்திரைத் திங்களில் அக்காலத்தில் கோலாகலமாய்க் கொண்டாடப்படும் “இந்திரவிழா” என்ற தமிழர் மரபின் பெருவிழா பற்றிய செய்திகள் கூட்டத்தில் பகிரப்பட்டன.

அதன் ஒரு பகுதியாய் அபர்ணா விசையிசைப் பலகை மீட்டலுடன், அருமையாகப் பாடினார். இளங்கோவன் தமிழோசையின் இத்தகைய பாரம்பரிய மரபு சார்ந்த முன்னெடுப்புகள் அனைத்து மட்டங்களிலும் பரவ வேண்டும் என்று தனது வாழ்த்துரையில் கூறினார். கவிஞர் முகுந்தை உ.கு.சிவகுமார் சித்திரைத் திருநாள் சிறப்பு கவிதையினை வாசித்தளித்தார்.

நிகழ்வின் உச்சமாய் “குழந்தைத் தொழிலாளரை ஊக்குவிக்கும் சமூகம் குற்றவாளியே!”என்னும் சிந்தை தூண்டும் தலைப்பிலான வழக்காடு மன்றம் நடைபெற்றது. நீதிபதியாய் வழக்கறிஞர் கவிதாயினி சபூரா ஹமீத் விளங்கிட, வழக்கறிஞர்களாய் மன்றத்தின் மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ரும்யா ஜஸ்டின் மற்றும் கவிஞர் பட்டுக்கோட்டை சத்யன் ஆகியோர் திறம்பட வாதம் – பிரதிவாதம் செய்தனர்.

குவைத் வாழ் தமிழார்வலர்கள், முக்கிய ஆளுமைகள் மற்றும் மன்றத்தின் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்ட கூட்டத்தில், துணைப் பொருளாளர் அறந்தை கணேசன் நன்றியுரையாற்றினார். மரபுசார் அறுசுவை விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here