கதர் பிறந்த கதை…!!

சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளமாக இருந்தது ‘கதர் ஆடை’. அன்னிய நாட்டின் உற்பத்தியில் வராத, கையால் நெய்து உடுத்திக் கொள்ளும் ஆடைதான் இந்த கதர். கதர் உடுத்தியவர் எல்லாம் காங்கிரஸ் காரர் என்ற பெயர் வருமளவுக்கு கதர் பிரபலமானது. கதரை பிரபலப் படுத்தியது மட்டுமல்ல அதை நாட்டுக்கும் அறிமுகப்படுத்தியவர் காந்தியடிகள்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பியதும் தனது தொண்டர்களுக்காக ஒரு ஆசிரமத்தை அமைக்க விரும்பினார். 1915ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி நதியின் கரையில் ஆசிரமத்தை அமைத்தார். இந்த ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் என்று எல்லாரும் இருந்தார்கள். இந்த ஆசிரமத்தில் தான் காந்தி முதன் முதலாக ராட்டையை பயன்படுத்தினார் என்று தான் நமக்கு தெரியும். பலரும் அப்படித்தான் எழுதி வருகிறார்கள். அது ஒரு வகையில் பொருத்தமாக இருந்தாலும். நடந்தது வேறு….

‘‘இந்தியாவில் வளர்ந்து வரும் வறுமையை போக்குவதற்கு சரியான மருந்து, கைத்தறி அல்லது கை ராட்டையே’ என்பதில் உறுதியாக இருந்த காந்தி சபர்மதி ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு கைத்தறியையோ, ராட்டையையோ பார்த்ததே இல்லையாம். ஆனாலும் கை ராட்டைகளை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்துள்ளனர். நெசவாளர்களை அழைத்து பயிற்சியும் பெற்றுள்ளனர். பின்னர் கையினால் நெய்யும் கதர் ஆடைகளை மட்டுமே அணிவது என்றே எல்லோரும் உறுதி எடுத்துள்ளனர்.

ஆனால், நாட்டுக்கு கதரை அறிமுகப்படுத்திய காந்திக்கு, கதர் என்கிற ஆடையை முதலில் அறிமுகம் செய்தது அலி சகோதரர்களின் தாய்தான். சுதந்திர போராட்ட வரலாற்றில் காந்திக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கிலாபத் இயக்க முன்னோடிகளான அலி சகோதரர்கள். இவர்களைப் பற்றி காந்தி கூறும் போது, ‘‘ எனது தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன ’’ என்பார்.

அலி சகோதரர்கள் வீட்டுக்கு ஒருமுறை காந்தி சென்றார். அப்போது அலி சகோதர்களின் தாயார் ஆலாஜிபானு என்கிற பலீமா, தனது கை ராட்டையில் நெய்த ஒரு ஆடையை காந்திக்கு பரிசாக வழங்கினார். அப்போது ‘‘காந்திஜி இதை ஃகதராக ஏற்றுக் கொள்ளுங்கள் ’’ என்றார். அது என்ன என்று அப்போது காந்தி கேட்டார். அதற்கு பருத்தி நூலில் இருந்து கையால் நூற்று எடுத்த ஆடை. உருது மொழியில் ஃகதர் என்றால் கவுரவம் என்று பொருள். அதனால் உங்களை கவுரப்படுத்த இந்த ஆடையை வழங்கினேன் என்றார் பலீமா.

அது குறித்து காந்தி விவரமாக கேட்டறி்ந்தார். இந்த சம்பவமே ராட்டையில் நூல் நூற்று தானே ஆடையை நெய்யும் வேகத்தை காந்திக்கு ஏற்படுத்தியது. ஃகதர் என்றால் தனது கரங்களால் தானே நெய்து உடுத்தும் ஆடை என்றும் அன்னிய கலப்பில்லாத ஆடை என்றும் நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்ற கோட்பாடு காந்தியால் அறிமுகமானது.

பின்னாளில் ஃகதருக்கு முன்னால் இருந்த ‘ஃ’ என்ற எழுத்தின் ஓசை மறைந்து ‘கதர்’ என்ற புதிய ஓசை உடைய சொல் உருவாகி, கதர் என்ற பெயரில் வழங்கி வருகிறது. சுதந்திர இயக்கத்தின் அடையாளமாக இந்த கதர் பிறகு மாறியது. இது தான் கதர் பிறந்த கதை. ஆகவே கதர் அணிவது கவுரவம் மட்டுமல்ல உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சி. எனவே இன்றைய தலைமுறையினர் கதர் ஆடைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here