கச்சத்தீவுக்கு அடுத்த ஆண்டு முதல் நாட்டுப் படகு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு

கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு, ராமேஸ்வரம் மீனவர்கள் நாட்டுப் படகுகளில் செல்ல அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பு அம்சங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசுத் தரப்பில் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடா வழக்கறிஞர் பிரின்சோ ரைமண்ட் தாக்கல் செய்த பொதுநல மனு : “கச்சத்தீவில் 1913ல் புனித அந்தோணியார் சர்ச் அமைக்கப்பட்டது. 1974ல் கச்சத்தீவை இலங்கை அரசிடம், இந்திய அரசு சில ஒப்பந்தங்கள் அடிப்படையில் கொடுத்தது.

அதன்படி இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தீவில் வலைகளை உலர்த்தலாம். அந்தோணியார் சர்ச் திருவிழா கொண்டாடலாம். 1974 க்கு பின் ஓலைக்குடா மக்கள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் திருவிழாவிற்கு சென்று வருகின்றனர். அங்கு ராமேஸ்வரம் மற்றும் அதைச்சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுப் படகுகளில் சென்று வருவது வழக்கம். இதுவரை எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.

கச்சத்தீவில் இன்று மற்றும் நாளை திருவிழா நடக்கிறது. மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்றுவர அனுமதி கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்தோம். அது பாதுகாப்பற்றது எனக்கூறி நிராகரித்தார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ராமேஸ்வரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்றுவர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு பிரின்சோ ரைமண்ட் மனு செய்திருந்தார். இதுபோல் மேலும் சிலர் மனுக்கள் செய்திருந்தனர். இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு உத்தரவு : “தற்போது குறுகிய கால அவகாசமே உள்ளதால், நடப்பு ஆண்டு மனுதாரர்கள் கோரும் நிவாரணம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழல் எழவில்லை. அடுத்த ஆண்டு முதல் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கச்சத்தீவு திருவிழாவிற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்றுவர பாதுகாப்பு அம்சங்கள், நிபந்தனைகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலித்து அரசு தரப்பில் அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here