ஏழைகளின், ‘பிரிஜ்’ மண்பானை..!!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஏழைகளின், ‘பிரிஜ்’ என்று அழைக்கப்படும், மண் பானை விற்பனை சூடு பிடித்துள்ளதால், அதன் விலையும் அதிகரித்துள்ளது. கோடையில் குடிநீரை, குளிர்ச்சியாக வைக்க இன்றும், கிராமங்களில் மண்பானை பயன்படுத்தப்படுகிறது. முன்பு நகரங்களில், அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் திறந்தால் மண் பானைகளில், குடிநீர் வைப்பது வழக்கம். இன்று, பிளாஸ்டிக் கேன்கள் வைக்கப்படுகின்றன.

இயந்திரகதியான வாழ்க்கை மற்றும் பிரிட்ஜ் போன்ற குளிர்சாதன பொருட்களின் வசதியால், மண்பானையின் பயன்பாடு, முழுமையாக மறக்கப்பட்டுவிட்டது. ஆனால், சென்னை மற்றும் புறநகரின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கோடை காலங்களில் மண்பானை விற்பனை தொடர்கிறது. பல ஆண்டாக, பானை தவிர, மற்ற மண் பாண்டங்களை விற்பனை செய்வோர் இன்றும், கோடை காலங்களில் பானை விற்பனையை ஆர்வத்துடன் செய்கின்றனர்.

அதற்கான வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கி செல்கின்றனர். கோடை காலம் துவங்கிவிட்டதால், மண் பானை விற்பனையும் சூடு பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவிலிருந்து, பானைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் நுகர்வோரை கவர குழாய் வைத்த பானையும் விற்கப்படுகிறது. தற்போது, சாதாரண பானை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும், குழாய் பொருத்திய பானை 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து செங்குன்றம் பானை வியாபாரி விஜயன் கூறியதாவது, “நாங்கள் 20 ஆண்டுகளாக, மண்பாண்டங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். அவற்றை பாதுகாப்பது, மிகவும் சிரமம். பொங்கல் பண்டிகையின் போதும், அதன்பின், கோடை காலத்திலும் பானை வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். சரக்கு வேனில் 1 லோடுக்கு சிறியதும், பெரியதுமாக 200 பானைகள் கொண்டு வர முடியும். நாங்கள் ஆந்திராவில் இருந்து வாங்கி வருகிறோம். வெயில் காலத்தில் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடிப்பது, கிணற்றில் இருந்து நீர் அள்ளி குடிப்பது போல் குளிர்ச்சியாக இருக்கும்” என்று கூறினார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here