ஏற்காட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!! 14 ஆம் தேதி முதல் அமல்

ஏற்காட்டில் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்து, குடிநீர் திறந்து வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1க்கு கிடைக்கும்.

ஏற்காடு மலைப்பகுதி மற்றும் சுற்றுலா தலம் முழுவதும் வரும் 14ம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்யும் அறிவிப்புகள் உள்ளடக்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள், வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

துண்டு பிரசுரங்களின் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், உணவு விடுதி நடத்துவோர் அனைவரும் 14ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர மக்காத தன்மையுடைய பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்துவதோ கூடாது. அதற்கு பதிலாக மக்கும் தன்மையுடைய பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 500 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டினை உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக, தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் இல்லாத ஏற்காடு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ரோகிணி துவக்கி வைத்து, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் தடை செய்யும் அறிவிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபு, ஏற்காடு தாசில்தார் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here