இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ‘திப்பு சுல்தான்’

ஆங்கிலேயே அரசின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியவர்களில், மைசூரின் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் மிக முக்கியமான ஒருவர் ஆகும். இந்திய சுதந்திர போராட்டத் தீயைப் பற்ற வைத்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட நாள் மே 4.

யார் இந்த திப்பு சுல்தான்?

இந்தியாவில் வணிகம் செய்வதற்காக உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள், முகலாயப் பேரரசின் சிகரமான அவுரங்கசிப் ஆட்சியில் இருந்தவரை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் தத்தமது பகுதிகளில் பணிவாக இருந்து வந்தனர். ஆனால் 1707 ஆம் ஆண்டு அவுரங்கசிப் இறந்த பின்பு, இந்தியாவில் பல சிற்றரசுகள் முளைத்தன. அவர்களுக்குள் பகையை மூட்டி, அவர்களை பலிகடா ஆக்கி டெல்லியை மையமாகக் கொண்ட ஒரு மத்திய அரசை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர்.

வட இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆங்கிலேய ஆட்சியில் தென்னிந்தியாவில் கால்பதிக்க முடியவில்லை. அதற்கு காரணம், மைசூரை ஆண்ட ஹைதர் அலி. 1767 முதல் 1782 வரை மைசூர் போரில் ஆங்கிலேயர்களை துரத்தியடித்த பெருமை இந்த ஹைதர் அலியையே சேரும். இந்த வீரவேங்கையின் புதல்வன் தான் திப்பு சுல்தான்.

தனது தந்தை ஹைதர் அலி இறந்தபின்பு இளம் வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்ற திப்பு சுல்தான் தனது தந்தையை போலவே ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். ஆற்காடு நவாப்புகளும், மராட்டியர்களும் ஏனைய பல இந்திய அரசுகளும், பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றனர். ஆனால் திப்புவோ, அனைத்தையும்விட சுதந்திரத்திற்கு பெருமதிப்பு அளித்தார்.

மதராஸில் ஆங்கிலேய அரசால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை  எதிர்த்து 1767 முதல் 1769 வரை தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் ஆங்கிலேய படைக்கும், மைசூர் படைக்கும் போர் நடந்தது. அனைத்து போர்களிலும் திப்புவிற்கே வெற்றி கிடைத்தது. இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர்களை தோற்கடித்து ஒரு இந்திய மன்னர் சொல்படி ஒப்பந்தம் போடுமளவிற்கு சுதந்திர வீரராக திகழ்ந்தார் திப்பு.

“யுத்தம் என்பது போர்க்களத்தில் மட்டுமே. எனவே அப்பாவிகள் மீது வன்முறை கூடாது. பெண்களை கவுரவமாக நடந்த வேண்டும். கைதிகளின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என தனது ராணுவத்திற்கு எழுத்துப்பூர்வகமாக உத்திரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான்.

போர்க்களத்திலேயே முதன்முறையாக ஏவுகணையைப் பயன்படுத்திய ஒரே இந்திய மன்னர் திப்பு சுல்தான் தான். இன்றும் நாசாவின் நுழைவாயிலில் திப்பு சுல்தான் ஏவுகணையைக் கொண்டு ஆங்கிலேய படைகளைத் தாக்கிய ஓவியங்கள் உள்ளன. ஹைதராபாத்தில் உள்ள அதோனிக் கோட்டையை நோக்கி போரிட்டபோது, அதில் பெண்கள் இருக்கிறார்கள் என்று அறிந்த திப்பு சுல்தான், தனது படைகளை பின் வாங்குமாறு செய்து, பெண்கள் அனைவரும் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வரை போர் நிறுத்தத்தை கையாண்ட மாமனிதர்.

திப்பு சுல்தான் முஸ்லிம் மன்னராக இருந்தாலும் இந்து மக்களோடு சுமுக உறவை வைத்துள்ளதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. 1782 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் அமைச்சரவையில் பேசியது ஆவணங்களாக இன்றும் உள்ளது. திப்புவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பூர்ணயா என்னும் இந்து தான். இன்று ஸ்ரீரங்கப்பட்டினத்தில் 100க்கும் மேல் உள்ள கோவில்கள் திப்புவின் ஆட்சிகாலத்திலும் இருந்தன. திப்புவின் அரண்மனைக்கு எதிரே தான் ரங்கநாதர் ஆலயமும் இருந்தது.

திப்புவின் ஆட்சிக்காலத்தில் 156 கோவில்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. ரங்கநாதர் கோவிலுக்கு திப்பு சுல்தான் அளித்த வெள்ளி பரிசுப்பொருட்கள், சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதியின் வேண்டுகோளை ஏற்று சாரதா மடத்தை மீட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு கையில் கிளி ஏந்திய சாரதா தேவியின் உருவத்தை சாரதா மடத்திற்கு திப்பு சுல்தான் பரிசளித்தார்.

திப்பு சுல்தான் ஆட்சிகாலத்தில் வழிபாட்டு தளங்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்து கோவில்கள் மற்றும் மடங்களுக்கு மட்டுமே 2,13,959 ரூபாய் அளிக்கப்பட்டது. சாதி, மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் வேறுபடுத்தி பார்ப்பது சட்ட விரோதமானது என சட்டம் இயற்றிய ஒரே இந்திய மன்னர் திப்பு சுல்தான் தான்.

நீதியும், இறையச்சமும் நிறைந்த திப்பு சுல்தான் ஜனநாயகத்தை காதலித்தவர். நில பிரபுத்துவத்தை ஒழித்து நிலத்தை உழுபவனே அதன் உடைமையாளன் என்று மாற்றியவர். இதன் விளைவாக மைசூர் மக்கள் வழக்கத்திற்கு மாறாக வளம் கொழித்தனர். வணிகமும், தொழில்துறையும் அதிவேக வளர்ச்சியடைந்தன. இராஜ்யம் எங்கும் புதிய நகரங்கள் தோன்றின. சுல்தானின் இராணுவம் நவீனமாகவும், நல்ல போர் தளவாடங்களோடும் இருந்தது.

பார்சி, அரபி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளை கற்றறிந்த திப்பு சுல்தான், தனது ஆட்சிக்காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தந்தார். நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்கிற திட்டத்தை நிறுவியவர் திப்பு சுல்தான். ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு வருமானத்தில் 1% மட்டுமே செவழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குடகு பகுதியில் ஒரே பெண்ணை பல ஆண்கள் திருமணம் செய்வதை தடுத்து சட்டம் இயற்றினார்.

கோவில்களில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் போட்டார். மதுவிலக்கை அமுல்படுத்தி அதை தீவிரமாக கண்காணித்தார் திப்பு சுல்தான். ஆங்கிலேயே எகாதிபத்தியத்திற்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆதரவை உருவாக்கிய இந்திய மன்னர் திப்பு சுல்தான் பற்றிய “உலகின் தலைசிறந்த இராணுவப்படை திப்புவின் படை” என்று ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் வெல்லெஸ்லி, பிரிட்டிஷ் அரசிற்கு எழுதிய கடிதம் இன்றும் இங்கிலாந்து அருங்காட்சியத்தில் உள்ளது.

மருது பாண்டிய சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்பன், இராணி வேலுநாட்சியார் ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆங்கிலேயரை கதிகலங்க செய்தவர் தான் திப்பு சுல்தான். இத்தனை அழகான ஆட்சி முறைகளையும், இந்து மதத்தினருக்கு மதிப்பு அளித்தும், கோவிலுக்கு மானியம் வழங்கிய திப்பு சுல்தானா பெண்களையும், குழந்தைகளையும் கொன்றிருப்பார்? இவரா கோவில்களை இடித்திருப்பார்?.

உடன் இருந்தவர்களின் துரோகத்தால் திப்பு கொல்லப்பட்டு, ஸ்ரீரங்கப்பட்டினம் வீழ்ந்த போது அந்நகரவாசிகள் ஆங்கிலேயர்களிடம் வந்து, எங்களது செல்வங்களையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் மைசூரை மட்டும் திப்பு சுல்தானுடைய வாரிசுகளின் கரங்களில் விட்டுவிடுங்கள் என்று கூறும் அளவிற்கு திப்பு சுல்தானின் மீது அவரது குடிமக்கள் பேரன்பு வைத்திருந்தனர். இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக திப்புவின் மாவீரம் மறைக்கப்படுகிறது.

சுதந்திர போராட்ட வரலாற்றில் திப்புவின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது. இஸ்லாமிய அரசரை சுதந்திர போராட்ட தியாகியாக போற்ற இந்த மதவாதிகளுக்கு மனமில்லை என்பது தான் திப்புவுக்கு எதிராக நடைபெறும் பிரச்சாரங்களுக்கு பின்னணி. “நரி போல் ஒரு நூறு ஆண்டுகள் வாழ்வதை விட சிங்கம் போல் ஒரு நாள் வாழ்வது சிறந்தது” என்று கர்ஜித்த தென்னிந்தியாவின் வீர காவியம். திப்பு சுல்தானின் விடுதலை தியாகத்தை மதவாதிகளின் பிழைப்பு வாத எதிர்ப்பாலும், மத அமைப்புகளின் அரசியல் பிழைப்பாலும் மறைக்க முடியாது.

 

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here