இந்தியாவின் சக்திவாய்ந்த புதிய ரயில் எஞ்சின்

பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனத்தின் பிரைமா என்ற பெயரில் குறிப்பிடப்படும் சக்தி வாய்ந்த மின்சார ரயில் எஞ்சின்களை வாங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் ஆர்டர் செய்திருந்தது. மொத்தம் 800 ரயில் எஞ்சின்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில், 5 ரயில் எஞ்சின்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொல்கத்தா துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. மீதமுள்ள 795 ரயில் எஞ்சின்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பீஹாரில் உள்ள மாதேபூரில் அமைக்கப்படும் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும்.

இந்த மின்சார ரயில் எஞ்சின்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள சாஹரன்பூர் மற்றும் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள பணிமனைகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்படும். அசெம்பிள் செய்யும் ஆலை மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்காக ரூ.300 கோடியை அல்ஸ்டோம் முதலீடு செய்ய இருக்கிறது. அல்ஸ்டோம் பிரைமா ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 12,000 குதிரை சக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. தற்போது பயன்படுத்தப்படும் ரயில் எஞ்சின்களை விட இரு மடங்கு கூடுதல் திறன் வாய்ந்தது.

இந்த ரயில் எஞ்சின்கள் முதல்கட்டமாக சரக்கு ரயில்களில் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலமாக, சரக்கு ரயில்களின் சராசரி வேகம் இரு மடங்காக உயரும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அல்ஸ்டோம் ரயில் எஞ்சின்கள் இணைக்கப்பட்ட சரக்கு ரயில்கள் மணிக்கு 120 கிமீ வேகம் வரை இயக்க முடியும். இதுதவிர, அதிக பாரத்தை இலகுவாக இழுக்கும் திறன் வாய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ரயில் எஞ்சின்களில் ஏபிபி டிரான்ஸ்ஃபார்மர்களும், நார் – பிரெமிஸ் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிவேகத்திலும் ரயிலை எளிதாக கட்டுப்படுத்த முடியும். வரும் 2020ம் ஆண்டிற்குள் 35 அல்ஸ்டோம் பிரைமா ரயில் எஞ்சின்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 2021ல் 60 ரயில் எஞ்சின்களும், அதற்கடுத்து, ஆண்டுக்கு 100 ரயில் எஞ்சின்கள் வீதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here