அரசு பள்ளியில் ஏசி வகுப்பறை

புதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகளில் ஏசி பொருத்தப்பட்டு உள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் 1958ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளி பின்னர் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த பள்ளியில் 126 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வகுப்பறைக்கு கொடையாளர்களின் உதவியுடன் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும், வகுப்பறையின் உள் மற்றும் வெளிப்பகுதியில் தாவரங்கள், விலங்குகள், போக்குவரத்து, விவசாயம், சாலை விதிகள் போன்றவற்றை மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன. குளிர்சாதன வகுப்பறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்து உள்ளனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் அரசு பள்ளியாக அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் கூறுகையில்..,

“பழமையான இந்த பள்ளியை முன்மாதிரியாக மாற்றுவதற்காக பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ரூ.35 ஆயிரத்தில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல ரூ.45 ஆயிரத்தில் தொங்கு கூரை (பால்சீலிங்), ரூ.35 ஆயிரத்தில் வர்ணம் தீட்டுதல், ரூ.12 ஆயிரத்தில் மின்விளக்குகள் என சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here