அனைத்துலக தாஜ் கல்லூரியின் நட்சத்திரா 3.0..!!

மலேசியா மாநகரின் ஈப்போ பகுதியில் அனைத்துலக தாஜ் கல்லூரியின் இந்து சங்க மாணவர்களும், மைபிபிபி புந்தோங் பொதுச் சேவை மையமும் இணைந்து ஏற்பாடு செய்த ‘நட்சத்திரா 3.0’ எனும் கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்வு கடந்த 16.9.2017 சனிக்கிழமை காலை 7:00 மணியளவில் தொடங்கி மாலை 5:00 மணி வரை ஈப்போ அனைத்துலக தாஜ் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்துலக தாஜ் கல்லூரியின் மாணவர்களையும், போட்டியில் பங்கேற்ற மாணவர்களையும் உற்சாகமூட்டும் வகையில் சிறப்புப் பிரமுகராக மைபிபிபி புந்தோங் வட்டார வளர்ச்சிக்குழு தலைவர் வழக்கறிஞர் டத்தோ நாரான் சிங், மைபிபிபி புந்தோங் வட்டார ஒருங்கிணைப்பாளருமாகிய டாக்டர் அ.இருதயம் செபஸ்தியர் ஆகியோர் வருகை புரிந்தனர்.

இந்நிகழ்வின் தொடக்கமாக தாஜ் கல்லூரியின் இந்து சங்க மாணவர்களும் சிறப்பு வருகையாளர்களும் இணைந்து பொங்கல் வைத்தனர். மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து தமிழ்க் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்களும், இடைநிலைப் பள்ளி மாணவர்களும் ஒன்றிணைந்து போட்டி விளையாட்டில் வெற்றி பெற்று நிறைய பரிசுகளை வென்றார்கள். ஒவ்வோர் ஆண்டும் தாஜ் கல்லூரியின் இந்து சங்க மாணவர்கள் இந்நிகழ்வை சில பிரிவுகளாக நடத்துவர். அதேபோல் இவ்வருடமும் சில பிரிவுகளாக நடத்தப்பட்டன.

இவ்வாண்டு மாறுவேடம், வர்ணம் தீட்டுதல், கதை சொல்லும் போட்டி, உறியடித்தல், பூச்சரம் பின்னுதல், மருதாணி இடுதல், நாடகம் நடித்தல், கோலமிடுதல் என பல போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் மாணவர்கள் நம் தமிழ் பாரம்பரிய உணவு, உடை, நடன பொருட்கள் என பல பொருட்களை கண்காட்சிக்காக வைத்திருந்தனர்.

சிறப்பு வருகை புரிந்த டத்தோ நாரான் சிங்க்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள் தாஜ் கல்லூரியின் இந்து சங்க மாணவர்கள். இப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here